மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத்துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர்.
கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து முன்னேற்றம் காட்டி வருவதாகவும், அடிப்படை உட்கட்டமைப்பு, கல்வி என அனைத்திலும் நன்கு முன்னேறிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.
புதுடில்லியில் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, அதற்கான பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியமைக்காக, மாற்றத்தின் வெற்றியாளர் விருது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்
துக்கு வழங்கியிருக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள், தானமாகப் பெறப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அலட்சியமாக நடந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்றினை ஏற்படுத்தி, தமிழக மக்கள் விருதுநகர் மாவட்டத்தை ஒரு தினுசாகப் பார்க்கின்ற நிலையில், பால் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஆகியோருடன் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்.
ரோமாபுரி நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். இது ஏனோ நம் நினைவுக்கு வந்து தொலக்கிறது.