மு.க.ஸ்டாலினின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள ஆங்கில புத்தாண்டு வாழ்த்துச் செய்தி:
’’உலகெங்கும் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிறக்கின்ற இந்த 2018ம் ஆண்டு அனைத்துத் தரப்பு மக்களும் அன்பு, சகோதர மனப்பான்மை மற்றும் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழல் நிறைந்த ஆண்டாகவும், வளர்ச்சியும், மகிழ்ச்சியும் மக்களுக்குக் கிடைப்பதற்குத் துணை நிற்கின்ற ஆண்டாகவும் அமைந்திட வேண்டும். அதுபோலவே, தமிழகம் தன் அருமை பெருமைகளை மீண்டும் உறுதியுடன் நிலைநிறுத்திக் கொள்ளவும், சமூகநீதி, மாநில சுயாட்சி மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகளைப் போற்றிப் பாதுகாத்திடவும், நாட்டில் உள்ள மாநிலங்களில் தொழில் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான முன்னேற்றங்களை அடையும் மாநிலமாக தமிழகம் மாறுவதற்கும் இந்தப் புத்தாண்டு நிச்சயம் உரிய வழிவகுக்கும். இயற்கையின் அரவணைப்பில் சூரியக் கதிரொளி வெளிச்சம் பரப்பி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரின் இல்லத்திலும் மகிழ்ச்சிப் பொங்கும் எழுச்சிமிகு ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமைந்திட எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தமிழ் மக்கள் அனைவருக்கும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.’’