Skip to main content

புதிய யு.பி.எஸ் உபகரணம் வெடித்து தீ விபத்து; நகைகள், பணம் தீயில் எரிந்து நாசம்!

Published on 25/04/2022 | Edited on 25/04/2022

 

New UPS equipment  fire; Jewelry, money destroyed by fire!

 

கொங்கணாபுரம் அருகே, புதிதாக வாங்கிய யு.பி.எஸ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நகைகள், பணம், ஆவணங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின. 


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி, பெரிய கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்தவர் சின்னமுத்து (54). விசைத்தறி தொழிலாளி. கோடைக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் அதை சமாளிக்க, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிதாக யு.பி.எஸ் உபகரணம் வாங்கியிருந்தார். சனிக்கிழமை (ஏப். 23) இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு, சின்னமுத்து, அவருடைய மனைவி, குழந்தைகள் ஆகியோர் தூங்கச் சென்றனர். 


இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) அதிகாலை 3.15 மணியளவில், வீட்டின் மற்றொரு அறையில் வைக்கப்பட்டிருந்த யு.பி.எஸ் பேட்டரி திடீரென்று வெடித்துச் சிதறியது. அந்த உபகரணங்களில் இருந்து பறந்த தீப்பொறி, அறைக்குள் இருந்த பொருள்களில் பட்டதால் அவையும் தீப்பிடித்து எரிந்தன. சிறிது நேரத்தில் அந்த அறை முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. 


யு.பி.எஸ் வெடிக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த சின்னமுத்து, பக்கத்து அறையில் தீ பரவுவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டை விட்டு பத்திரமாக வெளியே ஓடிவந்தார். 


இதுகுறித்து தகவல் அறிந்த இடைப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிகழ்விடம் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். இச்சம்பவத்தால் அக்கம்பக்கத்தினர் எல்லோரும் அங்கு கூடிவிட்டதால் அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. 


இந்த தீ விபத்தில் யு.பி.எஸ் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த பாத்திரங்கள், பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள், 55 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வீட்டு பத்திரங்கள், துணிமணிகள் ஆகியவை முற்றிலும் தீக்கிரையாயின. இவற்றின் மதிப்பு 7 லட்சம் ரூபாய் ஆகும். 


இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் லெனின், வருவாய் அலுவலர் நதியா, கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, கொங்கணாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். 


சின்னமுத்துவும், குடும்பத்தினரும் வேறு அறையில் தூங்கியதால் உயிரிழப்பு அபாயம் தடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்