தமிழக மக்கள் மனதில் பெரியார் நிலைத்து இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. பெரியார் தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் பெரியாரின் பெயரைச் சொல்லி, அவரின் கொள்கையை முன்வைத்து அரசியலுக்கு வந்த கட்சிகள்தான் 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் தமிழகத்தில் ஆட்சி செய்கின்றன. இதுதான் பெரியாரின் சாதனை என்பது பெரியாரியவாதிகளின் கருத்தாக உள்ளது.
இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை, பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. பெரியார் உயிருடன் இருக்கும்போதே, அவர் முன்பே, அன்றைய முதல்வர் காமராஜர் அவர்களால், பல முக்கிய அரசியல் தலைவர்கள் சூழ திறக்கப்பட்டது தான் அந்த பெரியார் சிலை.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையைச் சுற்றி மரங்கள் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. சுற்றி அமைக்கப்பட்டிருந்த கிரானைட் பலகைகள் பேருந்துகள் மோதி சேதமடைந்து காணப்பட்டன. இதைக்கண்ட திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கே.என்.நேரு, தனது சொந்த நிதியிலிருந்து 12 லட்சம் ரூபாய் தொகை கொடுத்து சிலையைப் புனரமைக்கும் பணியை மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்.
அந்தச் சிலையின் பகுதிகளும், சிலையும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநகராட்சி பரிசீலித்து தற்போது பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திராவிட அரசியலின் ஆத்திச்சூடியே பெரியார்தான். அவரால்தான் அண்ணா உருவாக்கப்பட்டார், அவரால் தான் கலைஞர் உருவாக்கப்பட்டார். எனவே, பெரியாரின் சிலையை சீரமைப்பது ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத்தினரின் முக்கியப் பணி. அதை நான் மேற்கொண்டு இருக்கிறேன் என்று பணியை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார் கே.என்.நேரு. செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரியார் சிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து கொண்டு இருக்கும் நிலையில் அதற்கு பதிலடிகளை திராவிடக் கட்சிகள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் திமுக எம்.எல்.ஏ ஒருவர் பெரியார் சிலையைப் புனரமைக்க 12 இலட்சம் ஒதுக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.