திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான 115.68 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலையம் 460 கோடியில் அமைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் குழுவினர் மூலம் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள பகுதியில் 70 இடங்களில் மண் பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த மண் பரிசோதனை முடிவுகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய பதிவுபெற்ற நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதில் நகரப் பேருந்துகள், புறநகரப் பேருந்துகள், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் ஆகியவை நிறுத்தி வைப்பதற்கான இடவசதி, கார், ஆட்டோ, இருசக்கர வாகன நிறுத்துமிடம், உணவகங்கள், எரிபொருள் நிரப்பும் மையம், ஓட்டுநர்களுக்கான தங்கும் விடுதி, உடைமாற்றும் அறை, பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான இடம், காவல் சோதனைச் சாவடி, புத்தக நிலையம் மற்றும் நூலகம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் விரிவான திட்ட அறிக்கையை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான தேர்வு குழுவினர் ஆய்வுசெய்து, சிறந்த திட்ட அறிக்கையை தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.