கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மனைவி ஞானசவுந்தரி (54). இவர் நேற்று மதியம் நெல்லிக்குப்பத்தில் உள்ள வங்கியில் அவருக்கு சொந்தமான தங்க நகைகளை ரூபாய் 60,000-க்கு அடகு வைத்துள்ளார். அடகு வைத்த அந்த தொகையை வங்கி நிர்வாகம் ஞானசவுந்தரியின் வங்கி கணக்கில் வரவு வைத்துள்ளது.
அதையடுத்து ஞானசவுந்தரி வங்கியின் அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுக்க சென்றுள்ளார். பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வராததால் மீண்டும், மீண்டும் முயற்சி செய்யும்போது அருகில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், தான் பணம் எடுத்து தருவதாக கூறி ஏ.டி.எம் கார்டின் சீக்ரெட் நம்பரை போடுமாறு கூறி அந்த நம்பரை தெரிந்து கொண்டார். பின்னர் “பணம் வரவில்லை என நீங்கள் வங்கி அதிகாரியிடம் சென்று கேளுங்கள்'' என்று கூறி, தான் கையில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இதையடுத்து ஞானசவுந்தரி வங்கி அதிகாரிகளிடம் சென்று, ‘நீங்கள் செலுத்திய ரூபாய் 60,000 பணத்தை எடுக்க முடியவில்லை' என புகார் தெரிவித்தார். அதிகாரிகள் அவரது செல்போனை வாங்கி அதில் இருந்த குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது ரூபாய் 10,000, 10,000 என பணம் எடுத்ததாக நான்கு முறை குறுஞ்செய்தி வந்ததை அறிந்த வங்கி அதிகாரிகள் ஞானசவுந்தரியின் ஏ.டி.எம். சீக்ரெட் நம்பர் கேட்டு, வங்கி கணக்கிலிருந்து ஏ.டி.எம் கார்டு இணைப்பினை துண்டித்தனர்.
வங்கி அதிகாரிகள் கணக்கை துண்டித்தால் மீதமுள்ள பணத்தை மர்ம நபரால் எடுக்கமுடியவில்லை. பின்னர் ஏ.டி.எம். கார்டை ஆய்வு செய்ததில் அந்த கார்டு கௌரி என்ற பெயரில் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஞானசவுந்தரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதையடுத்து அந்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் அந்த மர்ம நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனவும் சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.