நெல்லையின் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆண்டுதோறும் நடக்கிற திருவிழாக்களில் முக்கியமாய் முத்தாய்ப்பானது ஆனித் தேரோட்டம். கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா காரணமான நெல்லை ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறவில்லை. அதன் பின்னர் நடந்த ஆனித் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்பில் களை கட்டியது.
கடந்த 3ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது ஆனிப் பெருவிழா. அன்றாடம் காலையிலும் இரவிலும் சுவாமி அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. 8ம் திருவிழா அன்று பூஜைகளுடன் சுவாமி கங்காள நாதராக தங்கத் திருவோடுடன் தங்கச் சப்பரத்தில் வீதி உலா நடந்தது. இதன்பின் அதிகாலையில் பிரியாவிடையுடன் சுவாமி நெல்லையப்பரும் காந்திமதியம்மனும் தனித்தனியாக நேரில் எழுந்தருளினர்.
காலை முதலே தேரோட்டத்திற்காக பக்தர்கள் கூட்டம் அலை அலையாக திரண்டனர். ஆனித் தேரோட்டம் நெல்லை மாநகரமே திருவிழாக் கோலமாக மாறியிருந்தது. தீபாராதனையுடன் பஞ்சவாத்தியங்கள் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்களான அப்துல்வகாப் நயினார் நாகேந்திரன், மேயர் சரவணன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனர். தேரோடும் 4 ரத வீதிகளிலும் மக்கள் வெள்ளத்தில் தென்றலாய் நீந்தியபடி அசைந்தாடி வந்தது சுவாமி நெல்லையப்பர் திருத்தேர்.திருத்தேரின் முன்னே பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேவாரப் பாடல்கள் பாடியபடி முன்சென்றனர் சிவனடியார்கள்.
நெல்லை மாநகர போலீஸ் கமிசனர் அவினாஷ் குமார் தலைமையில் மாநகர துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் செயல்பட்டனர்.