கரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24- ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட லாக்டவுன் காரணமாக அன்றாடம் வேலை பார்ப்பவர்கள், அடிமட்டக் கூலித் தொழிலாளர்கள் பலர் குடும்பம் குடும்பமாக வேலையின்றித் தவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மட்டுமல்ல உணவுக்காக அன்றாடம் பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நெல்லையை ஒட்டியுள்ள பழைய பேட்டையின் நெசவாளர் காலனியின் அழகப்பபுரம் தெரு, தெற்குத் தெரு, நடுத்தெரு உள்ளிட்ட பத்து தெருக்களில் சுமார் 800- க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள அண்ணா விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம், நிறுவப்பட்ட கைத்தறி ஆலையில் பணிபுரிந்து வந்தனர்.
நெசவுத் தொழில் காலப் போக்கில் நலிவடைந்ததால் கைத்தறி ஆலை மூடப்பட்டது. அதில் வேலை பார்த்த அனைவரும், பித்தளைப் பட்டறை, ஜவுளிக் கடைகள், ஓட்டல் கூலிப்பணி என பல்வேறு வேலைகளுக்கு மாறினர் அன்றாடக் கூலித் தொழிலாளிகளானார்கள். தற்போதைய கரோனா ஊரடங்கில், இந்தப் பகுதி நெசவாளர்கள் வேலையின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அரசின் இலவச ரேசன் உணவுப் பொருள், மற்றும் ஆயிரம் ரூபாய் போதுமானதாக இல்லை என்று கூறுகிறார்கள் நெசவாளர்கள்.
மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் அரசு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அவைகள் கூட இவர்களுக்கு எட்டியும் எட்டாத நிலைதான். நேற்று காலை, இப்பகுதி மக்கள் தங்களின் உணவுக்குக் கூட வழியில்லாததால் தட்டு ஏந்தி நெல்லை- தென்காசி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து அந்கு வந்த பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர் மாவட்ட ஆட்சியரிடம் அவர்களின் குறைகளைப் பதிவு செய்ய தகுந்த ஏற்பாடுகளைச் செய்து தருவதாகக் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
ஊரடங்கால் பசியால் வாடும் பொதுமக்களின் துயர் துடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.