நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள மணிமூர்த்திஸ்வரத்தைச் சேர்ந்தவர் பொன் இசக்கி. டீ மாஸ்டரான இவர் இன்று (29/05/2020) காலை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து, தனது மனைவி முத்து லட்சுமியைக் கொலை செய்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், பொன் இசக்கி மனைவியின் சடலத்தை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரிடம் பொன் இசக்கி அளித்த வாக்குமூலத்தில் “ஆரம்பத்தில் ஒழுங்காகத் தான் இருந்தாள். இப்ப கொஞ்ச நாளா வேறு ஒருத்தர்கிட்ட பேசுறான்னு எனக்கு அரசல் புரசலா தகவல் வந்துச்சு. நானும் கண்டிச்சேன். மூன்று பெண் பிள்ளைகள் நமக்கு இருக்கு. ஒரு பிள்ளையக் கட்டிக் குடுத்தாச்சு. இன்னும் 2 பிள்ளைகளைக் கரையேத்த வேண்டியிருக்கு. நீ இப்படிச் செஞ்சா நியாயமானு? கண்டிச்சேன். அவள் கேட்கல. அதான் வெட்டிப் பொலி போட்டுட்டேன்” என்றிருக்கிறார்.
2 பெண் பிள்ளைகளும் நேற்று (28/05/2020) உறவினர் வீட்டிற்குச் சென்ற நேரத்தில், மனைவியுடன் வாக்குவாதம் செய்த பொன் இசக்கி, ஒரு கட்டத்தில் அரிவாளால், வெட்டிக் கொலை செய்ததாகப் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. தடம் மாற்றமும், தடுமாற்றமும் விபரீதத்தில் கொண்டு போய் விடும் என்பதற்கு முத்துலட்சுமி சாட்சி!