Skip to main content

தபால் துறையினரின் அலட்சியம்: மருத்துவ கனவுடன் இருந்த மாணவரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

Published on 27/06/2018 | Edited on 27/06/2018
med


தபால் துறையினரின் அலட்சியத்தால் மருத்துவ கனவுடன் இருந்த மாணவர் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவர் வெளிநாட்டில் ஓட்டுனராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மகன் வசந்த், சிறுவயது முதலே மருத்துவராகும் கனவில் இருந்து வருகிறார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண்களும், நீட் தேர்வில், 384 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
 

 

 

இந்த நிலையில், மருத்துவப்படிப்பிற்கான விண்ணப்பத்தை கடந்த ஜுன் 14ம் தேதி விரைவு தபால் மூலம் சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திற்கு வசந்த் அனுப்பியுள்ளார். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் 19ம் தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 9 நாட்கள் தாமதமாக கடந்த 24ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு விண்ணப்பம் சென்றடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவர் வசந்த்தின் விண்ணப்பத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் நிராகரித்துள்ளது.

நீட் தேர்வில் ஓ.பி.சி. பிரிவினர் 96 மதிப்பெண்கள் பெற்றாலே தேர்ச்சி என்ற நிலையில், மருத்துவப்படிப்பு எளிதில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த மாணவரின் கனவு, தபால் துறையினரின் அலட்சியத்தால் தகர்ந்து போயுள்ளது.

தபால்துறையின் அலட்சியத்திற்கு தாம் பொறுப்பாக முடியாது என்றும் உண்மையை உணர்ந்து மருத்துவக் கல்வி இயக்குனரகம் தனது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும் என்றும் மாணவர் வசந்த் கூறியுள்ளார். இதனால் மாணவர் வசந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அரசு தங்களுக்கு உதவ வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்