ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இரண்டாம் முறையாக ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்பது சட்டம் என்பதால் தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
மக்களவையில் திமுக எம்.பி பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தபோது, “பந்தயம், சூதாட்டம், அரசியல் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் 34வது பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஏழாவது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மாநில அரசுகளே இயற்ற முடியும். சில மாநில அரசுகள் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான சட்டங்களை இயற்றியுள்ளன. திறமை, அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பதை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ளன. குறிப்பிட்ட விளையாட்டுக்கு திறன் வகுக்கப்பட்டுள்ளது என்றால் அது திறன் விளையாட்டு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகளை சூதாட்டம் என்று இந்திய சட்டங்கள் வரையறுத்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.