நீட் தேர்வால் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவு கனவாகவே போய்க் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தான் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டில் 10 சதவீதம் இடம் கொடுக்க ஆய்வுக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் தமிழக அரசு 7.5 சதவீதம் இடம் கொடுக்க அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு +2 படிப்பு முடித்து நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல தகுதி பெற்ற மாணவர்கள் என்று 714 மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில், கடந்த ஆண்டு +2 படித்துவிட்டு ஒரு வருடம் வீட்டில் இருந்தோ, பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றோ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களில் பெயர்கள் இல்லை.
தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அரசுப் பள்ளி நிர்வாகம் அதற்கான ஆவணங்களை வழங்கி சான்றளித்து வருகிறார்கள். இதில் இந்த வருடம் தேர்வு எழுதி தேர்ச்சியடைந்த மாணவர்கள் பட்டியலில் இருந்த பலர் மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பம் செய்யத் தகுதியற்றவர்கள் என மாவட்ட கல்வி நிர்வாகம் ஒதுக்கி வைத்துள்ளது. காரணம் 6 ஆம் வகுப்பு முதல் +2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே உள் ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றவர்கள்.
மகாதீர்கான்
அரசு உதவிபெறும் பள்ளியில் படித்தவர்களும் தனியார்ப் பள்ளி கணக்கிலேயே வருவார்கள் என்று கூறியுள்ளனர். இதனால், அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் 300 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 17 ஆவது இடத்திலும் புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதலிடத்திலும் உள்ள அறந்தாங்கி அரசுப் பள்ளி மாணவன் மகாதீர்கான் இடையில் சில வருடங்கள், அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துள்ளதால் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கிறார்.
புவனரோஷினி
இதே போல வடகாடு அருகில் உள்ள கீழாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த புவனரோஷினி என்ற மாணவி 2017-2018 ஆம் கல்வியாண்டில் மருத்துவர் கனவோடு ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், +2 படித்து 1,082 மதிப்பெண்களும் நடப்பு ஆண்டில் நடந்த நீட் தேர்வில் 373 மதிப்பெண்களும் பெற்று தனது மூன்றாண்டு கனவு நிறைவேறும் ஆசையோடு அரசுப் பள்ளி உள் ஒதுக்கீட்டுக்காக விண்ணப்பிக்க முயலும் போது, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும்பள்ளியில் படித்ததால், உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க தகுதியற்றவராக திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இதேபோல மாநிலம் முழுவதும் பலர் உள்ளனர்.
இந்தநிலையில் தான் நெல்லை மணிமூர்த்திஸ்வரம் மாணவி ப்ரீத்தி, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த எங்களுக்கும் உள் ஒதுக்கீட்டில் இடம் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் கூறும் போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க ஆய்வு செய்த குழு, 10 சதவீதம் வழங்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில் 7.5 சதவீதம் மட்டுமே தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதனால் மீதமுள்ள 2.5 சதவீதம் இடங்களை அரசு சலுகைகளோடு படித்த அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு அவசரமாக நடவடிக்கை எடுத்தால் கிராமப்புற மாணவர்களில், மேலும் 100 மருத்துவர்களை உருவாக்கலாம். அதாவது அரசுப்பள்ளியில் முழுமையாகப் படித்தவர்களுக்கு முக்கால் பங்கும் அரசு சலுகைகளோடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கால் பங்கும் கொடுக்கலாம். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்இடஒதுக்கீட்டிற்கு எந்தப் பாதிப்பும் வராது என்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் உள் இட ஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்டிய தமிழக அரசுக்கும் இதற்கு முழு மூச்சுடன் குரல்கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆ.மணிகண்டன்
தற்போதைய அரசாணையில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை முழுமையாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் உள் இட ஒதுக்கீடு என அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதே நேரத்தில், இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பே அரசுப் பள்ளிகளில் எந்த வகுப்பில் சேர்ந்திருந்தாலும், அவர்களுக்கு விதிமுறையில் விலக்கு அளிப்பது அவசியமாகும். காரணம் அரசுப்பள்ளியில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் பள்ளியில் சேரவில்லை, அதற்கு முன்பே தனியார்ப் பள்ளிகளிலோ அல்லது உதவி பெறும் பள்ளிகளிலோ, ஆறாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை, எந்த வகுப்பில் பயின்றிருந்தாலும், அவர்களுக்கும் இட ஒதுக்கீட்டில் இடமளிக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ்நாடு அரசும், ஆசிரியப் பெருமக்களும், சமூக அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாகச் செய்து வரும் பிரச்சாரங்களின் காரணமாகவும், தொடர் முயற்சிகளின் காரணமாகவும் தனியார்ப் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுமூச்சாக சேர்ந்து வருகின்றனர்.
இந்த உள் இட ஒதுக்கீட்டில் தனியார்ப் பள்ளிகளை விட்டு, அரசுப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாகச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிமை இழப்பு ஏற்படுகிறது. இதனைச் சரி செய்யும் பொருட்டு உரிய தெளிவாணையை அரசு வெளியிட வேண்டும். இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் அரசுப் பள்ளியில் சேர்ந்து இருந்தாலும் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
மேலும், இம்மாணவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்குப் படிப்படியாக விதிவிலக்கு அளித்து விட்டு, இதுவரை ஆர்வத்துடன் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கக் கூடியதாக இருக்கும். முழுமையாக அரசுப் பள்ளியில் படித்தவர்கள், இட ஒதுக்கீடு என்ற விதியைப் படிப்படியாக நடைமுறைப் படுத்துவதன் மூலமே அரசின் நோக்கம் முழுமையடையும். எனவே இந்த ஆண்டு வரை அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவர்களின் நலனையும், அரசுப் பள்ளிகளில், தனியார்ப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பயில்வதை ஊக்குவிக்கும் அடிப்படையிலும், உரிய திருத்தத்துடன் உரிய வழிகாட்டுதல் ஆணையை வெளியிட அரசிடம் கேட்டுக் கொள்கிறோம் என்கிறார்.
தமிழக அரசு தான் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.