தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார். இந்நிலையில் இன்று (16.07.2021) தற்போது சென்னையில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் பதவியேற்பு நடைபெற்றது.
இதில் பேசிய மத்திய இணையமைச்சர் எல். முருகன், பாஜகவை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு செல்வதே இலக்கு என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ''காவல்துறை பொறுப்பையும் விவசாயத்தையும் துறந்து மோடி மீது கொண்ட பற்றினாலும், தேசபக்தியின் காரணமாகவும் பாஜகவில் இணைந்து கடந்த 10 மாதங்களாக பாஜகவின் துணைத்தலைவராக எனது பணியை செய்துவந்தேன். தற்போது தலைவர் எனும் புதிய பொறுப்பைக் கொடுத்து கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என நம்பி எனக்கு கட்சித் தலைவர் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்கள். நான் மகிழ்ச்சியுடன் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 70 நாட்கள் ஆகியும் கூட தேர்தல் அறிக்கையில் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் திமுக முழுமையாக நிறைவேற்றவில்லை. நாங்கள் வந்தால் நீட் எக்ஸாம் நடக்காது என்று சொன்னார்கள். 2006இல் இருந்து 2016 வரை தமிழ்நாட்டில் 29,725 மருத்துவ மாணவர்கள் போனார்கள். நீட்டுக்கு முன்பு ஒரு வருடத்திற்கு சராசரியாக 19 கிராமப்புற மாணவர்கள் சென்றனர். ஆனால், நீட் தேர்வுக்குப் பின்னர் போன வருடம் மட்டும் 430 பேர் நீட்டின் மூலமாக கிராமத்தில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்குச் சென்றுள்ளனர். இதுதான் உண்மையான சமூகநீதி. இதுதான், மத்திய அரசு கிராமப்புற மாணவர்களுக்காக செயல்படுகிறது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் நீட் வேண்டாம் என ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால் நீட் எங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. தமிழகத்தில் இனி பாஜகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, இனி பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம்''என்றார்.