நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவ–மாணவிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது நடக்கவில்லை. எனினும், இந்த ஒரு ஆண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு அளியுங்கள் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவும் நடக்கவில்லை. தமிழகத்தில் கிராமப்புற மாணவ–மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் நியாயம் வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று நம்பி காத்திருந்த மாணவர்களும், பெற்றோரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கல்வி சேர்க்கைக்கு இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்ததுபோல மத்திய, மாநில அரசுகள் தவறான அணுகுமுறையை கையாண்டுள்ளன. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்கள் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. இது கண்டனத்துக்குரியது. கடைசி நேரத்திலாவது மத்திய அரசு தனது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு பயன் அளிக்கும் முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.