டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை தேவை: த.வா.கா கோரிக்கை
டெங்குவைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்திதியுள்ளது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் புதுவை மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் கூறியதாவது,
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் இதுவரை 1,627 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் 600 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று சென்றுள்ளனர். இருந்தபோதும் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வருகை எண்ணிக்கை அதிகம் உள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் புதுச்சேரி மாவட்டத்தில் மட்டும் 217 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 110 பேருக்கு டெங்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் 500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகள் அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மொத்த மருத்துவர்கள் 40 பேர். மொத்த செவிலியர்கள் 80 பேர்.
இவர்கள் 3 ஷிப்ட் முறையில் பணியாற்றி வருவதால் வரும் நோயாளிகளை சரிவர கவனிக்க முடியவில்லை என்று பல குற்றசாட்டுகள் உள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நோயளிகள் அவதிப்படுகிறார்கள்.
இதனால் அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் . தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க வேண்டும். இதனை தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது. இதனை அரசு செயல்படுத்தவில்லை எனில் மக்களை திரட்டி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சுந்தரபாண்டியன்