மதுரையில் ஈ.வி.எம் மிஷினை வைத்து முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகிறது உடனே வாக்கு எண்ண வேண்டும் என்று கூறி சமூக செயற்பாட்டாளர் நந்தினி தன் தந்தையுடன் வந்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது, “ஆளும் கட்சி, தான் நினைத்தபடி முடிவுகள் வர வேண்டும் என்று எண்ணுகிறது. அதனால்தான் ஓட்டு எண்ணும் நாட்களை தள்ளிப்போட்டு முறைகேடுகள் நடத்த முனைகிறது.
வாக்குப்பெட்டி உள்ள அறைகள் அருகில் கேரவன் நிறுத்தி தொழில் நுட்ப உதவியுடன் ஓட்டை மாற்ற முயற்சி நடக்கிறது. நடுநிசியில் கன்டெய்னர் லாரிகளில் வாக்குப் பெட்டிகள் உடன் வந்திருந்தது, பெரும் சந்தேகத்தைக் கொடுக்கிறது. இப்படியாக தொடர்ச்சியாக தற்போது கூட லேப்டாப்புடன் 40 கணினி வல்லுநர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது தேர்தல் முடிவை மாற்றும் எண்ணத்துடன் மத்திய மோடி அரசு மாநில அரசும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. எனவே, வாக்குகளை உடனடியாக எண்ணி முடிவு அறிவிக்கும்படி கேட்டு போராட்டம் நடத்த உள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.