கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நம்மாழ்வாரின் திருவுருவப் படத்திற்கு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய விதைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும், விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள், ‘தற்சார்பு வாழ்வியல் முறையை முன்னெடுக்க வேண்டும். மறைந்த நாட்டு விதைகளை மீட்டெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். பொதுமக்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று உறுதிமொழி ஏற்றனர்.
அடுத்த மாதம் முதல் தமிழக அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் வழங்குவதாகக் கூறியுள்ள நிலையில், அவ்வாறு வழங்காமல் இயற்கையாகக் கிடைத்த பொருளை இயற்கையாகவே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். செறிவூட்டப்பட்ட அரிசியினால் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் செறிவூட்டப்பட்ட அரிசியை ரேஷன் கடைகளில் வழங்குவதை தமிழக அரசு தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தனர். இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கவும், மரபு வழி நாட்டு விதைகளைப் பாதுகாக்கவும் நம்மாழ்வார் ஆற்றிய பணிகள் குறித்தும், பாரம்பரிய விவசாயத்தை முன்னெடுத்து செல்வதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் இயற்கை விவசாய முன்னோடிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.