
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காவிரி ஆற்றுப்பாலம் அருகே வாகன தணிக்கையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். பறக்கும் படை அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் தணிக்கை நடந்தது.
அப்போது, அந்த வழியாக கேரளா மாநிலத்தில் முட்டை லோடு இறக்கிவிட்டு நாமக்கல்லுக்கு வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை நடத்தினர். விசாரணையில் லாரி ஓட்டுநர் பெயர் நைனாமலை என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி காணப்பட்ட 4.57 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
முட்டை வியாபாரம் செய்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்ததாக ஓட்டுநர் கூறினார். எனினும் அதற்கான ஆவண ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் பணத்தைப் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகு பணத்தைப் பெற்றுச் செல்லுமாறு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.