வட்டி தொழில் செய்து வந்த ஒருவரை கடத்திச் சென்று கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தண்ணீர்பந்தல் குமரிபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). வட்டித் தொழில் செய்து வந்ததுடன், அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வந்தார். அறக்கட்டளையின் பெயரில் பலரிடம் நன்கொடை வசூலித்துள்ளார். ஆனால், அந்த அமைப்பை அவர் சரியாக நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே சரவணன், தன்னிடம் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக திருப்பித் தருவதாக உறுதி அளித்தார். இதை நம்பிய பலர் அவரிடம் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், நாமக்கல் அருகே உள்ள பண்ணக்காரன்பட்டியைச் சேர்ந்த வட்டித் தொழில் செய்து வரும் நாகராஜ் (வயது 36) என்பவரிடம், 8 வாரங்களில் இரட்டிப்புப் பணம் தருவதாகக் கூறி 10 லட்சம் ரூபாயை சரவணன் வாங்கியுள்ளார். தவிர, கார் வாங்குவதற்காகவும் பணம் வாங்கியுள்ளார். ஆனால் நாகராஜிடம் வாங்கிய பணத்தை இரட்டிப்பு மடங்காக தராததோடு, அசலையும் திருப்பித் தராமல் சரவணன் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த பிரச்சனையை சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ளலாம் எனக்கூறி நாகராஜ் சரவணனை அழைத்துள்ளனர். அதன்படி கடந்த சனிக்கிழமை (மார்ச் 4) அவர் நாமக்கல்லுக்குச் சென்றுள்ளார். அங்கு பஞ்சாயத்து நடந்துள்ளது. அப்போது திடீரென்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நாகராஜ் தரப்பினர், சரவணனை அன்று இரவு முழுவதும் அவர்கள் இடத்திலேயே அடைத்து வைத்துள்ளனர்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) காலை நாகராஜ், அவருடைய கூட்டாளிகளான காவேட்டிப்பட்டியைச் சேர்ந்த வட்டித் தொழில் செய்து வரும் வினோத் (வயது 37), நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த ஜோசப் (வயது 22), கவின்குமார் (வயது 22) ஆகியோர் சரவணனை காரில் ஏற்றி கொல்லிமலைக்கு கடத்திச் சென்றனர். கொல்லிமலை செம்மேடு பகுதியில் உள்ள லேம்ப் கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இரவு வரை அடைத்து வைத்து, சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். கழுத்தில் காலை வைத்து மிதித்து உள்ளனர். இதில், ஞாயிற்றுக்கிழமை இரவே சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கும்பல், சரவணனின் சடலத்தை அந்த விடுதியிலேயே போட்டுவிட்டு இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்று, கொல்லிமலையிலேயே வேறு ஒரு இடத்தில் பதுங்கிக் கொண்டனர். இந்நிலையில் திங்கட்கிழமை காலையில் விடுதி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அறைக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சரவணன் சடலமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ், வாழவந்திநாடு காவல்நிலைய ஆய்வாளர் கோவிந்தராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் சரவணனை நான்கு பேர் கொண்ட கும்பல் கடத்தி வந்ததும், அவரை அறையில் அடைத்து வைத்து தாக்கியதும் தெரியவந்தது. கொலையாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கொல்லிமலையில் இருந்து அடிவாரத்திற்கு வரும் வழியில் ஒரு முதன்மைச் சாலை மற்றும் 3 மாற்று வழித்தடங்களிலும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். காரவள்ளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு காரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அந்த காரில் நாகராஜ் உள்ளிட்ட 4 பேரும் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலையுண்ட சரவணனுக்கு சத்யா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய நிஷார், நவீன் ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலை நடந்த 24 மணிநேரத்தில் 6 பேரை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் பாராட்டினார். வட்டி தொழில் செய்து வந்த சரவணன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.