Skip to main content

தனது பள்ளி பருவ விளையாட்டு குறித்து மனம் திறந்த நக்கீரன் ஆசிரியர்! 

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

சென்னை, மாதவரம் பால்பண்ணை பகுதியில் ‘கேர் டூகெதர்’ (care together) எனும் கால் பந்தாட்டக் குழு, வருடத்திற்கு ஒருமுறை என 18 ஆண்டுகாலமாக ஆண், பெண் இருபாலருக்குமான கால்பந்து விளையாட்டுப் போட்டிகளை மாநில அளவில் நடத்திவருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் மாநிலம் முழுவதும் உள்ள கால் பாந்தாட்ட குழுக்களை அழைத்து, 5 நாள் தொடர் ஆட்டமாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிவரை நடத்தப்பட்டது.

 

இதில் 75 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் பெண்களுக்கான பிரிவில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி. மகளிர் அணியும், தமிழ்நாடு காவலர் மகளிர் அணியும் மோதின. அதில் தமிழ்நாடு எஸ்.டி.ஏ.டி அணி வெற்றிபெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றது. அதேபோல, ஆண்களுக்கான பிரிவில் கேர் டூகெதர் அணியும், ரயில்வே அணியும் இறுதியாக மோதின. இதில் கேர் டூகெதர் அணி வெற்றிபெற்று முதல் பரிசை வென்றது. அதேபோல், 18 வயதிற்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்கான போட்டியில் பட்டினப்பாக்கம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. 

 

இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்குவதற்காக நக்கீரன் ஆசிரியர் மற்றும் விசிக தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன் ஆகியோர் பரிசு வழங்கி சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டி என்பது உண்மையிலே, ஊர் கூட்டி தேர் இழுப்போம் என்பதற்குச் சான்று. அப்படி அந்த ஊர் கூட்டி தேர் இழுப்பதில் முக்கிய பங்காற்றியவரும், அஸ்திவாரமாகவும் இருந்துவந்துள்ள பயிற்சியாளர் விக்டர் மற்றும் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் இருவரையும் இந்த நேரத்தில் பாராட்டியாக வேண்டும். என்னுடைய பள்ளி பருவத்தில் ஆரம்பகால விளையாட்டாக நான் முதலில் விளையாடியது கால் பந்தாட்டம்தான். அதன் பிறகு கால் பந்தாட்டம் அரசியல் பக்கம் திரும்பியது. அது எனக்கும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நடைபெற்றது. அதுவும் இப்போது முடிந்துவிட்டது. விளையாட்டு என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமானது. விளையாட்டில் வெற்றி பெறுபவர்கள், தோல்வி அடைபவர்கள் இருவருமே வெற்றியாளர்களே. அது உங்களின் அடுத்தக்கட்ட உந்துதலுக்கு வழிவகுக்கும். தோல்வி அடைபவர்களே அடுத்த உச்சத்தை அடைய முடியும் என்பதற்கு நானே சான்று. மேலும் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவும், வெற்றிபெறவும் வாழ்த்துகள்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்