நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜி என்ற காசி, பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் மற்றும் குடும்பப் பெண்கள் என பலருடன் ‘பழகி’ ஆபாச வீடியோ எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்தான். அவன் மீது பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி பெண்களை ஏமாற்றியதாக 4 வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் பதிவாகி, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். முதலில் 3 நாட்கள், அடுத்து 6 நாட்கள் என போலீஸ் காவலில் எடுத்து காசியை விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு போலவே, காசி வழக்கிலும் தொடக்கத்திலிருந்தே புலனாய்வு செய்து, அவனது கூட்டாளிகள் பக்கம் நாகர்கோவில் காவல்துறை நெருங்கவில்லை என்பதையும், துணிந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அவன் ஈடுபட்டு வந்ததன் பின்னணியில் முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும் இருப்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது 'நக்கீரன்'. காசி மற்றும் அவனது கூட்டாளிகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியே தீரவேண்டுமென்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஜனநாயக மாதர் சங்கத்தினரும் போராடி வருவதையும் 'நக்கீரன்' பதிவு செய்துள்ள நிலையில், காசி வழக்கினை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றுவதற்கு, குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரைத்திருக்கிறார்.