நாகை அருகே சாராயம் விற்றவர்களைப் பெண்கள் ஒன்றுகூடி அடித்து விரட்டியதோடு மூட்டை மூட்டையாக இருந்த சாராய பாக்கெட்டுகளையும் சாலையில் வீசி நொறுக்கினர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள செம்பியன்மாதேவி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் மூங்கில்குடி. அந்தக் கிராமத்தில் சிலர் காரைக்காலில் தயாரிக்கப்படும் ஆபத்தான ஸ்பிரிட் சாராயத்தைக் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். சாராய விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்தப் பகுதி பெண்கள் பலமுறை காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட நாகை மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து புகார் மனுவை அளித்தனர். மனுவைப் பெற்ற நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உடனே நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதோடு, நாகை எஸ்.பி.யிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இருந்தபோதிலும், சாராய விற்பனை தடையில்லாமல் நடந்து வந்தது. இதனைக் கண்டு ஆவேசமடைந்த மூங்கில்குடி கிராமப் பெண்களும், பொதுமக்களும் ஒன்றுகூடி கள்ளச்சாராயம் விற்பனை செய்த கும்பலை ஓட ஓட அடித்து விரட்டினர். அதோடு அங்கிருந்து சாராய பாக்கெட்டுகளையும் அதே இடத்தில் போட்டு உடைத்தனர்.