அல்கொய்தா அமைப்பில் தொடர்பில் இருந்ததாக நாகையை சேர்ந்த இருவரது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர்.
அல்கொய்தா அமைப்பின் உதவியுடன் செயல்படும் வகாத் இஸ்லாம் அமைப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை குழுவினர் தமிழகத்தில் சென்னை, நாகை உள்ளிட்ட 4 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நாகை மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முஹம்மது என்பவரது வீட்டிலும், சிக்கல் அசன்அலி என்பவரது வீட்டிலும் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த தேசிய புலனாய்வு துறை குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
டிஎஸ்பி சாகுல் ஹமீது தலைமையிலான தேசிய புலனாய்வு குழுவினர் இரண்டு வீடுகளிலும் நீண்ட நேரம் சோதனை நடத்தினர். சோதனையில் லேப்டாப், பென்டிரைவ், கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதோடு, அவர்களது உறவினர்களிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு துறை குழுவினரால் சந்தேகிக்கப்படும் ஹாரிஸ் முஹம்மது, அசன்அலி ஆகியோர் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இவர்கள் மீது போலி பாஸ்போர்ட் வழக்குகள் இருப்பதாகவும் விசாரனையில் கண்டுபிடித்துள்ளனர்.
அதோடு என்,ஐ,ஏ அதிகாரிகளின் சோதனையின்போது ஹாரிஸ் முஹம்மது, அசன்அலி ஆகியோர் வீட்டில் இல்லை என்பதும், அவர்கள் தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகவும்," என்,ஐ,ஏ குழுவினர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.