"நடவுசெய்த நிலத்தை நாசப்படுத்திய கெயில் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது தேசிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என விவசாயிகள் ஆர்டிஓவிடம் மனு கொடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தில் நடவு செய்யப்பட்ட விவசாய நிலங்களில் கெயில் நிறுவனத்தினர் குழாப்பதிக்க குழி தோண்டி நாசம் செய்தனர். அதில் மோகன்தாஸ், சிவானந்தம் உள்ளிட்ட விவசாயிகள் குறுவை நடவு செய்து ஒருவாரகாலமே ஆகியுள்ளது. குழாய் பதிக்க பொக்லைன் இயந்திரங்களை கொண்டு பள்ளம் தோண்டியபோது பெற்றெடுத்த பிள்ளைகளின் வயிற்றை கிழிப்பதுபோல் உணர்ந்து, தங்களது வயல்களில் இறங்கி சேற்றை உடம்பில் பூசி போராட்டத்தை நடத்தினர்.
அதனால் தற்காலிகமாக குழாய்பதிக்கும் பணி நிறுத்திய கெயில் நிறுவனம், பொக்லைன் டிரைவர் திருஞானசம்பந்தத்தின் மூலம் அருகில் உள்ள செம்பனார்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க செய்தனர். புகாரை வாங்கிய காக்கிகள் அவசர,அவசரமாக, நிலத்துக்கு சொந்தக்காரர்களான மோகன்தாஸ், சிவானந்தம் உள்ளிட்ட 8 பேர் மீது 143, 341,147, 506(1) அதாவது அனுமதி இல்லாமல், கூட்டமாக அத்துமீறி கூடி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் இந்த புகாருக்கு முன்பே மோகன்தாஸ், சிவானந்தம் ஆகியோர் செம்பனார்கோவிலில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"நிலத்துக்கு சொந்தக்காரர் மீது நிலத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்போடும், காக்கிகள் விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் நுழைந்ததோடு இளம்பயிரை நாசப்படுத்தியதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை, காவல்துறை கெயில் நிறுவனத்தின் கைக்கூலிகளாகவே மாறிப்போனதுதான் வேதனையாக உள்ளது," என்கிறார்கள் விவசாயிகள்.
இதற்கிடையில் சிவானந்தம் சக விவசாயிகளுடன் வந்து மயிலாடுதுறை ஆர்,டி,ஓ, அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, " எனது ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோடை நடவு செய்தேன். கடந்த 15 ம்தேதி அன்று மதியம் கெயில் நிறுவன அதிகாரிகள் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வயலை நாசம் செய்துவிட்டனர். என்னுடைய அனுமதி இன்றியும், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென ஒரு ஏக்கர் விளை நிலத்தில் உள்ள நாற்று மற்றும் நடவுகளை நாசம் செய்துவிட்டனர். இந்த செயலானது பட்டியல் சாதி மற்றும் பட்டியலின வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 மற்றும் பாராளுமன்ற மசோதா 2018 ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு குடும்பத்தில் ஒன்று நிலம், பட்டியல் சாதியினரான எங்களின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியிருப்பது பயிரிடும் உரிமையை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே கெயில் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியிருக்கிறார்.