நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது.அதேபோல் வாகனங்கள் மீதும் கல்வீச்சியதால், அந்த பகுதியில் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்த காவல்துறை மோதலில் ஈடுப்பட்டவர்களை அதிரடியாக கைது செய்து, வன்முறை ஏற்படாத வண்ணம் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த தமிழக கைத்தறி துறை அமைச்சரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ்.மணியன் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை செய்தார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், நாகை மாவட்ட காவல்துறை அதிகாரிகள், மற்ற அரசு அதிகாரிகள் வேதாரண்யத்தில் நிலவி வரும் சூழல் குறித்து எடுத்துரைத்தனர்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து இரவோடு இரவாக அம்பேத்கர் சிலை எடுத்து வரப்பட்டு, வேதாரண்யத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் நிலையை நீக்கிவிட்டு, கிரேன் மூலம் புதிய சிலை அங்கு பதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்பேத்கர் சிலை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் வேதாரண்யம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது வேதாரண்யம் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஏனெனில் வணிக வளாகங்கள், கடைகள் திறக்கப்பட்டு, வாகன போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. இருப்பினும் அம்பேத்கர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.