நாகை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பெயரைப் பயன்படுத்தி அவர் நலத்திட்டமாக 31 பேருக்கு ஸ்கூட்டி வழங்க உள்ளதாக அட்டை அச்சடித்து கிராமங்களில் கொடுத்து ரூபாய் 5 ஆயிரம் வரை வசூலில் ஈடுபட்ட தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றிய அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் ஆவணம் கனி உள்பட இருவரை பொதுமக்களே பிடித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் சிவன் மோட்டார்ஸ் என்ற பெயரில் ஹீரோ ஷோரூமுக்கு பேராவூரணி வட்டம் ஆவணம் கிராமத்தில் இருந்து தொடர்பு கொண்ட ஒருவர் மார்ச் 5- ஆம் தேதி நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி இலவசமாக ஸ்கூட்டி வழங்குகிறாரா? அந்த வண்டிகள் உங்கள் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படுகிறதா? என்று கேட்டுள்ளார். ஷோரூமில் இருந்து பேசியவர்கள் அப்படி ஏதும் இல்லை என்று சொன்னதுடன் கூடுதல் விளக்கம் கேட்க இருவர் டோக்கன் கொடுத்து பணம் வசூல் செய்கிறார்கள் என்று போனில் தொடர்பு கொண்ட நபர் கூறியுள்ளார்.
அதன் பிறகு மோசடியில் ஈடுபட்டு வந்த நபரை ஷோரூமில் இருந்து தொடர்பு கொண்டு தங்களுக்கு பைக் வேண்டும் என்று கேட்க ரூ. 5 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர். பணத்துடன் இருப்பதாகக் கூறி அவர்களை கீரமங்கலம் வரவைத்து பிடித்து கீரமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து ஷோரூம் நிர்வாகிகள் கூறும் போது, "ஆவணத்தில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டு கேட்டதும் மோசடி நடப்பதை அறிந்து சம்மந்தப்பட்டவர்களை பின் தொடர்ந்தோம். எங்களுக்கு வண்டி வேண்டும் என்று பொறி வைத்து பிடித்தோம். அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவு ஒன்றியச் செயலாளர் கனியின் பைக்கில் இருந்த பையில் 50- க்கும் மேற்பட்ட டோக்கன்கள், ஒரு நோட்டில் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சோ்ந்த பலரிடம் ஆதார் நகல் வாங்கி வைத்திருந்தனர். விசாரித்த போது விடுதி சந்திரன் என்பவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகக் கூறினார்கள்.