நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர்கள் இருவர் கத்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து விசாரித்தோம், "புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியை சேர்ந்தவர் ஆனந்தன். அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தனின் நண்பர் முருகேசன் ஆகிய இரண்டு பேரும் நாகை அருகே உள்ள திருமருகல் ஜெயசந்திரா ஏஜென்சிஸ் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தனர். அந்த பங்க் கச்சனம் பகுதியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமானது.
அந்த பங்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த முருகேசன் தற்கொலை செய்துகொள்ளும் வரை விசுவாசமான வேலைக்காரராகவே இருந்து வந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகேசனின் நண்பன் ஆனந்தனை அழைத்துவந்து வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வரவு செலவு கணக்கு பார்த்ததில் சுமார் 8 லட்சம் ரூபாய் கணக்கு வராததால் திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்திருக்கின்றனர். தொடர்ந்து அந்த பணம் கணக்கிற்கு வராததால் தொகையை இருவருமே ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் எழுதி கொடுத்துவிட்டு அங்கேயே வேலைப் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2 ம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தனின் இறப்புக் குறித்தான தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்திற்கு நேற்று (06/06/2020) இரவு முருகேசனை அழைத்து சென்று முருகேசன் மீதே புகார் அளித்திருக்கிறார், அங்கு முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி போலீசாரை வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன் மொத்த தொகையும் தன்னால் இனி கொடுக்க முடியுமா? என்கிற அச்சத்திலும், தனது நண்பன் ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இரண்டு பேரின் உறவினர்களும் நாகைக்கு வந்து உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர் திட்டச்சேரி போலீசார்.
ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரின் உயிரிழப்பு உரிமையாளரால் நடந்ததா? அல்லது கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கியதால் அவர்கள் மிரட்டி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.