கும்பகோணத்தில் உள்ள தாண்டம்தோட்டம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இருந்து 51 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட சம்பந்தர் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்காவில் கண்டுபிடித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தாண்டம்தோட்டம் கிராமத்தில் உள்ள நாதனபுரேஷ்வரர் சிவன் கோயிலில் இருந்த சம்பந்தர் சிலை, கடந்த 1971- ஆம் ஆண்டு திருடப்பட்டது. சிலைத் திருட்டு குறித்து, கடந்த 2019- ஆம் ஆண்டு சிலைத் தடுப்பு பிரிவினரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் சிலைப் புகைப்படத்தை வைத்து, பல்வேறு அருங்காட்சியகங்கள், ஏல மையங்களில் அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டனர்.
அப்போது, அமெரிக்காவில் உள்ள பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்யும், ஏல நிறுவனத்தின் இணையதளத்தில் காணாமல் போன சம்பந்தர் சிலையைக் கண்டனர். அதைத் தொடர்ந்து, இரண்டு சிலைகளும் ஒன்றுதானா என்பதை அரிய புகைப்பட நிபுணர்களுக்கு, அதன் புகைப்பட நகல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆய்வுக்கு பின் இரண்டு புகைப்படங்களில் இருப்பதும் ஒரே சிலைதான் என்பதை உறுதி செய்தனர். இதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள சிலையை இந்தியாவிற்கு கொண்டு வர உதவுமாறு அமெரிக்காவிற்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோரிக்கை கடிதம் அனுப்பினர். யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் படி விரைவில் சிலையை மீட்டு, கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.