140 நாட்களுக்கு பிறகு சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேற்று ஆந்திர போலீசாரால் மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டு தற்போது அதிகாலையிலிருந்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனிடம் எழும்பூரில் இருக்கக்கூடிய சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்று அதிகாலையில் இருந்து முகிலனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 140 நாட்கள் அவர் எங்கு இருந்தார், என்னவெல்லாம் செய்தார், யாரையெல்லாம் சந்தித்திருக்கிறார் என்பது தொடர்பான விசாரணையை சிபிசிஐடி போலீசார் முன்னெடுத்துள்ளனர்.
அதேபோல முகிலனுடைய தகவல்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யக்கூடிய நடவடிக்கைகளையும் சிபிசிஐடி போலீசார் முன்னெடுத்துள்ளனர். அவரது வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சற்று நேரத்திற்கு முன்பாக அவருடைய மனைவி பூங்கொடி, வழக்கறிஞர் சுதாராமலிங்கம் ஆகியோர் அங்கு அவரை சந்திக்க வருகை தந்தனர். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது விசாரணைக்கு பிறகு அவர் மனைவி மற்றும் வழக்கறிஞரை சந்திப்பதற்கான அனுமதி வழங்கப் பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இன்று இரவுக்குள் முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக சிபிசிஐடி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறது எனவே முகிலனை கண்டுபிடித்து இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் அந்த மனு மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. வேலூரில் இருந்து சென்னை கொண்டு வரும்போது எழும்பூரில் அவர் தன்னை யாரோ கடத்தி சென்றதாகவும் மேலும் உற்று கவனித்து பார்க்கும்போது வேறு வெளிமாநிலத்தில் இருந்ததாகவும் முகிலன் கூறியதாக தகவல்கள் வந்துள்ளது. எனவே அவர் உண்மையாகவே கடத்தப்பட்டிருக்கிறாரா என்ற கோணங்களிலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக ஆட்கொணர்வு மனு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த விசாரணைக்கு பிறகே அவரது மனைவி மற்றும் வழக்கறிஞரை சந்திப்பதற்கான அனுமதியை சிபிசிஐடி போலீசார் வழங்குவார்கள். இன்று இரவுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.