
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ளது பால்ராம்பட்டு எனும் கிராமம். இந்தக் கிராமத்தினை ஒட்டிச் செல்லும் சாலையோரம் 14ஆம் தேதி காலை, நடுத்தர வயது பெண்மணி ஒருவர் கழுத்து, கை, கால் உட்பட அவரது உடம்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்துகிடந்துள்ளார். அவ்வழியே சென்ற கிராமத்து மக்கள் இந்தக் காட்சியைப் பார்த்து திடுக்கிட்டனர். உடனடியாக கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி. ராமநாதன், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்துகிடந்த அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், கொலை செய்யப்பட்ட பெண் யார், அவரை எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்து கொலையாளியைக் கைதுசெய்ய வேண்டி டி.எஸ்.பி. ராமநாதன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்களது விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சின்னசேலம் அருகே உள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா, வயது 37 என்பதும், இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயானவர் என்பதும் தெரியவந்தது. மேலும், இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சங்கீதா தனது 2 ஆண் குழந்தைகளுடன் அம்மாபேட்டை பகுதியில் வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், சங்கீதாவின் பெண் தோழி ஒருவர் மூலம் சங்கராபுரம் அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த 40 வயது விவசாயி கந்தன் என்பவர் சங்கீதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். இருவரது அறிமுகம் திருமணத்திற்கு மீறிய உறவானது. ஒருகட்டத்தில் இருவரும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவிபோல் வாழ்ந்துவந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில், சங்கீதாவுக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த வேறு ஒருவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று கந்தன் சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் கந்தனுக்கும் சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் நடந்துவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி சங்கீதா ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி இனிமேல் கந்தனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசி முடிவு செய்துள்ளார். இதை உறுதிசெய்ய கந்தனிடமிருந்து எழுத்து மூலம் எழுதி வாங்கிக்கொண்டு, இருவரும் பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் சங்கீதா தனது 2 மகன்களுடன் மீண்டும் அம்மாபேட்டை சென்று தனியாக வசித்து வந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் 14ஆம் தேதி அதிகாலை பல்ராம்பட்டு கிராம சாலை ஓரம் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
இந்த தகவல்களை விசாரணையின் மூலம் கண்டறிந்த போலீசார், சங்கீதாவின் முன்னாள் கணவர் கந்தனை தேடிப்பிடித்து கைதுசெய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், சங்கீதா தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். அதனால் சங்கீதாவின் மீது கடும் கோபத்தில் இருந்ததாகவும் அந்த ஆத்திரத்தின் காரணத்தால் சங்கீதாவை வெட்டிக் கொலை செய்துள்ளதாக தனிப்படை போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.