கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ளது கணியாமூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தேவேந்திரன் வயது 41. இவர், தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளைப் பாதுகாப்பதற்காக தினமும் அங்கேயே தங்கிக் கொள்வார். இரவு நேரங்களிலும் அங்கேயே படுத்து தூங்குவார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம விலங்கு ஒன்று ஆடுகள் கட்டப்பட்ட கொட்டகையில் புகுந்து ஆடுகளைக் கடித்து குதறியுள்ளது. இதில் எட்டு ஆடுகள் அங்கேயே இறந்துவிட்டன. மேலும், 10 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. நேற்று காலை தூங்கி எழுந்த தேவேந்திரன், ஆடுகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து கால்நடைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த கால்நடை மருத்துவர் ஜெயகாந்தி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று படுகாயமடைந்த 10 ஆடுகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து கனியாமூர் கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் ஏற்கனவே இதுபோன்ற மர்ம விலங்கு நடமாட்டம் காரணமாக ஆடுகள் உயிரிழந்த சம்பவங்கள் நடந்துள்ளன. மூன்று மாதங்களுக்கு முன் தோட்டப்பாடி கிராமத்தில் ஏழு ஆடுகளும், ஒரு காட்டுப் பகுதியில் உள்ள வீட்டில் சில ஆடுகளும் மர்ம விலங்கு கடித்ததால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காட்டு நரி அல்லது செந்நாய் போன்ற விலங்குகள் ஆடுகளைக் கடித்திருக்கலாம் என்று கூறப்படுகின்றன. இதுகுறித்து கால்நடைத் துறையினர், வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.