திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி வந்து அடையக்கூடிய பயணிகள் கொண்டு வரக்கூடிய வெளிநாட்டு கரன்சிகளை இந்திய ரூபாய் ஆக மாற்றுவதற்கு விமான நிலையங்களில் மணி எக்சேஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மணி எக்சேஞ்ச் நிறுவனம் மூலம் உலக நாடுகளில் இருந்து கொண்டுவரக்கூடிய கரன்சிகளை மாற்றி இந்திய ரூபாயாக வழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது சட்டவிரோதமாக இடைத்தரகர்கள் விமான நிலையத்திற்குள் இருந்துகொண்டு, வெளிநாட்டு கரன்சிகளைக் கமிஷன் மூலம் மாற்றிக் கொடுத்து வருகின்றனர். அதோடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரக்கூடிய தங்கத்தை, இந்தப் புரோக்கர்கள் மூலம் பயணிகள் விற்பனையும் செய்கின்றனர்.
இந்த இடைத்தரகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் திருச்சி விமான நிலைய இயக்குனர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறை ஆணையர் ஒரு தனிப்படை அமைத்து அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இன்று (13.02.2021) காலை விமான நிலையத்தில் பண மாற்றம் செய்வதற்காகக் காத்திருந்து அவர்களைத் தனிப்படை கைது செய்துள்ளது. இதில் தற்போது 5க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.