கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி சாலையில் உள்ளது முரார்பாளையம். இப்பகுதியிலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் வசித்துவருபவர் முனியன். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரது மகன் அசலன் என்பவரிடம் இருந்து 1987ஆம் ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தை கிரயம் பெற்று, அதில் விவசாயம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர், இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த நிலத்தின் பட்டாவை அவர் பெயருக்கு மாற்றம் செய்ய முயற்சி செய்துவருவதாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் முனியன் குடும்பத்தினர் புகார் மனு அளித்துள்ளனர்.
அதன் பேரில் அதிகாரிகள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மனமுடைந்த முனியனும் அவரது குடும்பத்தினர் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களும் நேற்று (22.06.2021) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முனியன் மற்றும் அவரது குடும்பத்தினரின் கையில் இருந்த பெட்ரோல் கேனைப் பறிமுதல் செய்ததோடு, அவர்கள் கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அழைத்துச்சென்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் முனியன் மகன் குணசேகரன் என்பவர் மட்டும் உள்ளே சென்று ஆட்சியர் அலுவலகத்திலிருந்த அதிகாரியிடம் புகார் மனுவை கொடுத்துள்ளார். அவரது மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து முனியன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீக்குளிக்கும் போராட்டத்தைக் கைவிட்டு தங்கள் ஊருக்குச் சென்றனர். கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரும் தீக்குளிக்கப் போவதாக அறிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.