
ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் அரிசியுடன் எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.
வருகின்ற 29-05-2020 முதல் 31-05-2020 வரை, குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கன்களில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டியிருக்கும். சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஜூன் 1- ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.