கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது கல்லுக்குட்டபட்டி. அங்கு விவசாயம் செய்துவந்த சின்னசாமியின் என்பவரின் தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் மலைப்பாம்பு ஒன்று விழுந்துள்ளது. இதனைப் பார்த்த விவசாயி சின்னசாமி மலைப்பாம்பை வெளியே எடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இறுதியில் அருகில் உள்ள பனகமுட்லு பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவரை அணுகியுள்ளார்.
இதனால் மலைப்பாம்பை மீட்க கிணற்றில் கயிற்றின் வழியாக இறங்கிய நடராஜ் கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை தூக்கிக்கொண்டு மேல ஏற முயன்றுள்ளார். பாதி தூரம் மேல வந்த நிலையில் திடீரென மலைப்பாம்பு நடராஜை சுற்றிக்கொண்டது. இதனால் சிக்கிக்கொண்ட நடராஜ் அதனிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் இறுதியில் மலைப்பாம்பு இறுக நெருங்கியதால் நடராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நடராஜின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மலைப்பாம்பால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் உள்ள அந்த மலைப்பாம்பை பிடிக்கத் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.