Skip to main content

ஏமாற்றிய நண்பர்கள்... கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி... மளிகை வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு  தற்கொலை

Published on 11/10/2022 | Edited on 11/10/2022

 

MONEY FRIENDS HUSBAND AND WIFE INCIDENT POLICE INVESTIGATION

 

கிருஷ்ணகிரி அருகே, ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி பணத்தை கறந்து சென்ற நண்பர்கள் ஏமாற்றியதாலும், கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததாலும் மளிகை வியாபாரி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி விஐபி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 47). ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் மளிகை கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 44). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  

 

பள்ளியில் காலாண்டு விடுமுறை விடப்பட்டதால் மகள்கள் இருவரையும் ஜெயலட்சுமியின் சொந்த ஊரான கோவையில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

 

இந்த நிலையில், திங்கள்கிழமை (அக். 10) காலை மளிகை கடையில் வேலை செய்யும் சீனிவாசன், மஞ்சுநாத் ஆகியோர் கடையின் சாவியை வாங்குவதற்காக சிவகுமாரின் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உள்பக்கம் தாழ் போடாமல் லேசாக மூடப்பட்டு இருந்தது.  

 

நீண்ட நேரமாக கதவைத் தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து யாரும் வரவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சிவகுமாரும், ஜெயலட்சுமியும் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  

 

இதுகுறித்து அவர்கள் சூளகிரி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதையடுத்து காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.  

 

சடலம் கிடந்த அறையில் சோதனையிட்டபோது அங்கிருந்து சிவகுமார் எழுதியதாக ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், ''பிஸினஸ் செய்வதற்காக நான் கடனாக வாங்கிய 2 கோடி ரூபாயை மற்றவர்களுக்கு கொடுத்து ஏமாந்து விட்டேன்.

 

அதனால் என்னால் கடனை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்களுக்கு என்னால் பதிலும் சொல்ல முடியவில்லை. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, நான் தற்கொலை செய்து கொள்கிறேன்,'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  

 

தொடர் விசாரணையில், சிவகுமாரிடம் சிலர் ரியல் எஸ்டேட் தொழில் செய்தால் குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகி விடலாம் என ஆசை வலை விரித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு நெருக்கமான சிலர் அவரிடம் இருந்து நிலம் வாங்குவதற்காக சிறிது சிறிதாக பணம் வாங்கிச் சென்றுள்ளனர். 

 

இதற்காக சிவகுமாரும் பலரிடம் 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்துள்ளார். நிலத்தில் முதலீடு செய்வதாக பணம் வாங்கிச் சென்றவர்கள் நிலத்தை வாங்கிக் கொடுக்காததோடு, பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதற்கிடையே சிவகுமாருக்கு கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.  

 

இதனால் மன உளைச்சல் அடைந்த சிவகுமார், மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  
 

சார்ந்த செய்திகள்