பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி, ரிசார்ட் உள்ளிட்ட சொத்துகளை வாங்கியது தொடர்பாக சசிகலாவுக்கு எதிரான வழக்கில், மதிப்பீட்டு பணிகளை முடித்து விட்டதாக, வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தொடர்பான மதிப்பீட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால், குறுக்கு விசாரணை செய்யக்கோரும் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து 2016- ஆம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு ரிசார்ட், 2 ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு காகித ஆலை, ஒரு சர்க்கரை ஆலை, 50 காற்றாலைகள் ஆகியவற்றை சசிகலா வாங்கியதாக வருமான வரித்துறை கண்டறிந்தது.
இதுசம்பந்தமாக, வருமானவரித்துறை சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், பெங்களூரு சிறையிலிருக்கும் சசிகலா தரப்பில், வருமான வரித்துறையின் தரப்பு சாட்சியங்களான வழக்கறிஞர் செந்தில், கிருஷ்ணபிரியா உள்ளிட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, 2012-13 முதல் 2017- 18 ஆம் நிதியாண்டு வரையிலான வருமான வரி கணக்கு மதிப்பீட்டு பணிகள் முடிந்து, மதிப்பீடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மதிப்பீடு நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டதால் குறுக்கு விசாரணை செய்ய கோரும் மனுவை விசாரிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், சசிகலா தாக்கல் செய்த 6 மனுக்களையும் செல்லாதது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.