புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்குப் பகுதியான ஆலங்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதியான பேராவூரணி தொகுதி உள்பட பல பகுதிகளில் பிரபலமடைந்த விழா மொய் விருந்துகள்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்காக ஆனி, ஆடி, ஆவணி மாதங்களையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் கஜா புயல் தொடங்கி கரோனா பரவல் என அடுத்தடுத்து ஏற்பட்ட இயற்கை இடர்பாடுகளால் மொய் விருந்து காலங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
முறையாக மொய் விருந்துகள் நடந்தால் சுமார் ரூபாய் ஆயிரம் கோடிகள் வரை பணம் புழக்கத்திற்கு வந்து போனது. காய்கறி, ஆட்டுக்கறி, அரிசி, மளிகை, விறகு, மொய் நோட்டு, பேனாக்கள் என பல தொழில் செய்வோரும் அச்சகம், சமையலர்கள் என பலரது வாழ்வாதாரங்களும் அடங்கி இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கால் அத்தனையும் முடங்கிப் போனது.
கடந்த சில வருடங்களாக பருவம் தப்பிய மொய் விருந்துகளால் வசூல் குறைவு என்றாலும், கூட வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க ஆனி, ஆடி, ஆவணி என்ற மொய் விருந்து பருவ காலம் மாறி தளர்வு உள்ள மாதங்களை பயன்படுத்தி மொய் விருந்துகள் நடத்தப்பட்டது.
அதேபோலதான் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்கழி மாதம் என்றும் பார்க்காமல் மொய் விருந்துகள் தொடங்கியிருந்தது. வரும் ஜனவரி 9- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கீரமங்கலம், கொத்தமங்கலம், பெரியாளூர், வடகாடு, கீழாத்தூர் என பல கிராமங்களிலும் சுமார் 60 பேர் இணைந்து மொய்விருந்து அழைப்பிதழ்கள் அச்சடித்து கொடுத்துவிட்டு மளிகை பொருள் வாங்கி வைத்திருக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு விழாக் குழுவினருக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
இந்த ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மொய் விருந்துகளை ரத்து செய்துள்ளனர் விழாக் குழுவினர். அடுத்த சில நாட்களில் மொய் விருந்தை நடத்த விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
மொய் விருந்தை ரத்து செய்துள்ள சிலர் கூறும் போது, "கிடைக்கும் இடங்களில் வட்டிக்கு கடன் வாங்கி சிறு சேமிப்பு போல பலருக்கு மொய் செய்து, அதனை அறுவடை செய்ய நாள் குறித்து ஊருக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுத்து விட்டு காத்திருக்கும் நேரத்தில் அரசின் அறிவிப்பால் தற்போது வரை வாங்கியுள்ள கடனை எப்படி திருப்பிக் கொடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது" என்கின்றனர்.