‘மொய் விருந்து’ இந்த வார்த்தை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரபலமான வார்த்தை. பலருக்கான வாழ்வாதராம். சாதி, மதம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர், அரசியல்வாதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு கலாச்சார விழாவாக இந்த மொய் விருந்துகள் நடத்தப்படுகிறது.
இது தமிழர்களின் வீடுகளில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் விழா செலவுகளைச் சமாளிக்க உறவினர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய்யாக எழுதிச் சென்றுள்ளனர். ஆனால், தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த 35, 40 வருடங்களுக்கு முன்பு சிலர் மொய் விருந்து என்று தனியாக அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்து விருந்து நடத்தி மொய் வசூல் செய்தனர். அந்தப் பகுதியில் உறவினர்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டக் கிராமங்களிலும் அந்தப் பழக்கம் பற்றிக் கொள்ள அதன் பிறகு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடங்கியது. இந்த மொய் விருந்துகளால் பலரது பொருளாதாரம் உயர்வுக்கும் வழி வகுக்கிறது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளை உருவாக்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடியிலும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆவணியிலும் மொய் விருந்துகள் நடப்பது வழக்கம். ஆனால் கஜா புயல், கொரோனா பாதிப்புகள் மொய் விருந்துகளையும் ஆட்டிப் பார்த்ததால் பருவம் தப்பிய மொய் விருந்துகள் நடத்தப்பட்டது. அதனால் வழக்கமாக ஆடியில் தொடங்கும் மொய் விருந்துகள் ஆனி மாதத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் தொடங்கிவிட்டது. டன் கணக்கில் ஆட்டுக்கறி, குவியல் குவியலாகச் சோறு, தலைவாழை இலையில் ஆப்பைக்கறி பரிமாறும் போது வரும் கமகம கறிக்குழம்பு வாசனை பலரையும் இழுத்து வரும்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு என சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி தேதி வரை சுமார் 500 முதல் ஆயிரம் பேர்கள் வரை கூட்டாக மொய் விருந்து வைத்து கோடிக்கணக்கில் மொய் வசூல் செய்த மகிழ்ச்சியான காலத்தை கஜா புயலும், கொரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் பிறகு போட்ட மொய்யாவது வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்க வேண்டிய மொய் விருந்து ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதமே தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் மொய் விருந்து கீரமங்கலத்தில் நடந்தது. இதனையடுத்து ஆனி, ஆடி இரு மாதங்களும் கீலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடக்கும் என்கின்றனர். மேலும் “மொய் என்பது தமிழர்களின் காலம் காலமான பழக்கவழக்கம். இதனை எந்தக் காலத்திலும் நிறுத்த முடியாது. இயற்கையின் மாற்றங்களால் வருவாய் குறைந்து சில வருடங்கள் வசூல் கொஞ்சம் தேங்கியது. ஆனால் விருந்துகள் தேங்கவில்லை. இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் மொய் என்ற பழக்கம் தொடரும்” என்கிறார் மொய் செய்ய வந்த பட்டிமன்ற பேச்சாளர் ஆதனூர் கோவி.தாமரைச்செல்வன்.