44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட் 2022' என்ற பெயரில்'நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஜூலை மாத இறுதியிலிருந்து ஆகஸ்ட் வரை இந்த போட்டி நடைபெற உள்ளது. 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்றுநோக்க வைக்கும் எனக்கருதப்படுகிறது. 20 பேர் கொண்ட இந்திய செஸ் அணிக்கு ஆலோசகராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு நியமித்துள்ளது. இந்திய அணியில் இளம் கிராண்ட் மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ஹரிகிருஷ்ணா, நாராயணன், சசிகிரண், விதித் குஜராத்தி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் ஜூலை 28 ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த முறை பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக மோடி தமிழகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.