நூதன முறையில் ஏமாற்றி குழந்தை கடத்தல்
எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை நூதன முறையில் ஏமாற்றி குழந்தையை கடத்தி சென்ற பெண்ணும் அவருக்கு உதவிய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர். இதில் கடத்தப்பட்ட குழந்தையுடன், ஏற்கனவே கடத்தப்பட்ட 1.5 வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.
திருவண்ணாமலை புளியம்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை(22). இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. 15 நாட்களான தனது பெண் குழந்தையின் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வறுமையில் வாடும் மணிமேகலையின் நிலையை அறிந்துக்கொண்ட சேலம் அப்சரா தியேட்டர் பகுதியை சேர்ந்த மணிமேகலை (29) என்பவர் குழந்தை பெற்ற மணிமேகலையை அணுகி ஆசை வார்த்தை கூறி தனது தங்கைக்கு குழந்தை இல்லை, உனக்கோ குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் உள்ளது. என் தங்கைக்கு இப்போது பிறந்த குழந்தையை கொடுத்தால் நான் உன்னையும் உன் மூத்த குழந்தையையும் அவர்களுடனே வைத்துக்கொள்ள சொல்கிறேன் என்று ஆசைவார்த்தைக்கூற அதை மணிமேகலை நம்பிவிட்டார்.
இதை பயன்படுத்தி மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் போதே எழும்பூர் மருத்துவமனை செக்யூரிட்டி பெண் ஊழியர் சுமித்ரா என்பவர் மூலம் மணிமேகலையை அவரது இரண்டு குழந்தைகளுடன் சேலத்தை சேர்ந்த மணிமேகலை வாடகை காரில் ஏற்றிக்கொண்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு மணிமேகலையை அவரது இரண்டு வயது பெண் குழந்தையுடன் இறக்கிவிட்டுவிட்டு, 15 மாத பெண் முழந்தையுடன் சாமர்த்தியமாக தப்பிச்சென்று விட்டார். தன்னை ஏமாற்றி குழந்தையை கடத்தியது பற்றி தாய் மணிமேகலை பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்க புகாரை பெற்ற போலீசார் தேடும் பணியில் இறங்கினர்.
கண்காணிப்பு கேமரா பதிவு, செல்போன் எண்களை வைத்து சேலத்தை சேர்ந்த மணி மேகலையையும், அவருக்கு உதவிய பெண் ஊழியர் செங்குன்றத்தை சேர்ந்த சுமித்ரா(33) மற்றும் மணிமேகலையின் தோழி சேலத்தை சேர்ந்த ஐஸ்வர்யா(25) ஆகியோரை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
இதில் முக்கியமான திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. கைது செய்யப்பட்ட மணிமேகலை வக்கீல், போலீஸ் உதவி கமிஷனர் என்று எழும்பூர் மருத்துவமனையில் சுற்றி வருவாராம். ஆனால் உண்மையில் பிளஸ்டூ மட்டுமே படித்தவர்.
மணிமேகலையை போலீஸார் கைது செய்யும் போது அவரிடம் ஒன்றரை வயதில் அழகான ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. கல்யாணமாகாத உன்னிடம் இந்த குழந்தை எப்படி வந்தது என்று போலீசார் கேட்டபோது அந்த குழந்தையையும் பிறந்து சில நாட்கள் ஆன நிலையில் கோவையிலிருந்து திருப்பூர் செல்லும் ரயிலில் திருடியதாக கூறியுள்ளார்.
தற்போது அந்த குழந்தையை போலீசார் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் கோவை எக்ஸ்பிரஸ்ரயிலில் குழந்தையை பறிகொடுத்து புகார் கொடுத்த பெற்றோர் விபரத்தை அளிக்கும்படி ரயில்வே போலீசாருக்கு சென்னை போலீசார் தகவல் கொடுத்துள்ளனர்.
அரவிந்த்