குமரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்படுத்துதல் மற்றும் ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி நாளை (10-ஆம் தேதி) நாகா்கோவில் வருகிறார். கலெக்டா் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆய்வுகளை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குமரி கடலில் மீனவர்கள் அடிக்கடி காணாமல் போவது, அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் குமரி மீனவர்கள் தாக்கப்படுவது, பல மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு கட்டுவதாகக் கூறி கட்டாமல் இருப்பதனால், அதனால் அடிக்கடி கிராமங்களில் கடல் நீர் புகுந்து குடியிருப்புகளை பதம் பார்த்துச் செல்கின்றன. இப்படிப் பல இன்னல்களில் மீனவா்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இதில் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் சமீப காலமாகத் தொடா்ந்து ஏற்படும் விபத்தால், 21 மீனவா்கள் உயிரிழந்துள்ளனா். இதனால் துறைமுகத்தை மாற்றியமைக்க மீனவா்கள் கோரிக்கை விடுத்தும், அரசு கண்டுகொள்ளவில்லை என இன்று (9 -ஆம் தேதி) காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (கிள்ளியூா்), பிரின்ஸ் (குளச்சல்) மற்றும் மீனவப் பிரதிநிதிகள் கலெக்டா் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
நாளை முதல்வர் வர இருப்பதால் போராட்டத்தை நடத்த வேண்டாம் என்று கலெக்டா் அரவிந்த், எம்.எல்.ஏ.க்களை அழைத்துப் பேசி துறைமுகம் மாற்றி அமைப்பது சம்மந்தமாக ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டா், மாவட்டத்துக்கு முதல்வா் நேரில் வர இருப்பதால் இந்த விஷயத்தை அவரிடம் நேரில் கூறுவதாகக் கூறினார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் தேங்காப்பட்டணம் துறைமுகம் வடிவமைத்தது போல் அமைக்கப்படாததால் தான் இந்த மாதிரி விபத்துகள் அடிக்கடி நடக்கிறது. இதனால் அந்தத் துறைமுகத்தை மாற்றி அமைத்து விபத்து ஏற்படாத வகையில் துறைமுகம் அமைக்க வேண்டும். மேலும், துறைமுகத்தில் தேங்கும் மணலை அள்ள நிரந்தரமாக மணல் அள்ளும் இயந்திரத்தை அங்கு நிறுத்த வேண்டும். மேலும், குமரி மாவட்டத்திற்கு வரும் முதல்வர், துறைமுகம் சம்மந்தமாக நல்ல அறிவிப்பை அறிவிக்காவிட்டால், 11 -ஆம் தேதி கலெக்டா் அலுவலகத்தில், முதல்வரைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.