சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் முழுவுருவ சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று (28/05/2022) திறந்து வைத்தார். அதற்கான நிகழ்வு தற்பொழுது துவங்கியுள்ள நிலையில் முதல்வர் முன்னிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலைஞரின் 16 அடி வெண்கல சிலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஆர்.பாலு, அமைச்சர் துரைமுருகன், தயாநிதிமாறன், கனிமொழி, ஏ.வ.வேலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திமுக தொண்டர்களும் திமுக கொடியுடன் குவிந்திருந்தனர். இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியோரும் கலந்துகொண்டனர். சிலை திறப்புக்கு பின்னர் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின், வெங்கையா நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.
சிலை திறப்பு நிகழ்வை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் வரவேற்புரை ஆற்றிய அமைச்சர் துரைமுருகன், ''தமிழகத்தை தலை நிமிர்த்தியவர், திராவிட இயக்கத்தை 50 ஆண்டுகள் தனது தோளில் சுமந்தவர் கலைஞர். கலைஞரின் சிலையை பார்க்கும் போது நேரிலே பேசுவது போலவே இருக்கிறது. அப்படி தத்ரூபமாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து கண்ணீர் வடிக்காமல் வெளியே வர முடியவில்லை. இத்தகைய நிலையை உருவாக்கி தந்தவர் முதல்வர் ஸ்டாலின்தான். அவர்தான் அந்த இடத்தை தேர்ந்தெடுத்தார்'' என்றார்.
அதனைத்தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''இன்று எழுப்பப்பட்டுள்ள சிலைக்கு இருக்கக்கூடிய சிறப்பு என்னவென்று கேட்டால் அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இடையில் கலைஞரின் சிலை அமைத்திருக்கிறது.இது மிக மிக பொருத்தமாக அமைத்திருக்கிறது. பெரியாரின் ஈரோட்டு பள்ளியில் படித்தவன், அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் பயின்றவன் என அடிக்கடி கலைஞர் வெளிக்காட்டியுள்ளார். அதற்கேற்றாற்போல் அண்ணாவுக்கு, பெரியாருக்கும் இடையே அவரது சிலை அமைத்துள்ளது. கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான் இந்த மாபெரும் கட்டிடம். தமிழக சட்டப்பேரவைக்காக கட்டப்பட்ட கட்டிடம் இது. தற்பொழுது மருத்துவமனையாக செயல்பட்டுக்கொண்டிருந்தாலும் கம்பீரமாக கலைஞரின் கனவு கோட்டையாகவே எழுந்து நிற்கிறது. துரைமுருகன் குறிப்பிட்டதுபோல் 2001 ஆம் ஆண்டு கலைஞர் அன்றைய ஆட்சியாளர்களால் கொடூரமாக கைது செய்யப்பட்டார். அப்பொழுது குடியரசு தலைவராக கே.ஆர்.நாராயணனும், பிரதமர் வாஜ்பாயியும் துடிதுடித்து போனார்கள். அப்பொழுது கலைஞர் கைது செய்த ஆட்சியாளர்களைக் கடுமையாகக் கண்டித்து விமர்சித்தவர்தான் இப்பொழுது கலைஞர் சிலை திறக்க வந்துள்ள இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. அதேநட்பை இன்று வரை பேணிக்காப்பவராக அவர் இருந்து வருகிறார்'' என்றார்.