கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்து சர்ச்சைகள் வெளியாகிய நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப்பெரியாறு அணையை கடந்த 5 ஆம் தேதி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''பேபி அணையைப் பார்த்துவிட்டுவந்தேன். அதன் கீழ் மரங்கள் இருக்கின்றன. அதனை அகற்றக் கேரளா அரசிடம் கேட்டால், அது வனத்துறையிடம் இருக்கிறது என்கிறார்கள். வனத்துறையிடம் கேட்டால், ரிசர்வ வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆகையால், அதன் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த மரங்களை அகற்றிவிட்டு அந்த அணையைச் சரி செய்வோம்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், 'முல்லைப்பெரியாற்றில் பேபி அணைக்குக் கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்குக் கேரள முதல்வருக்கு நன்றி. மரங்களை வெட்டுவது இரு மாநில மக்களுக்கும் நீண்ட காலத்திற்குப் பயனளிக்கும். பேபி அணை மற்றும் மண் அணையைப் பலப்படுத்த இந்த நீண்டகால கோரிக்கை முக்கியமானது. இந்த அனுமதி மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவு வலுப்படுத்த வழிவகுக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.