
தி.மு.க தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் முப்பெரும் விழாவில் காணொளி வாயிலாக உரையாற்றினார். இந்த உரையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதற்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் அந்த விசாரணை கமிஷனின் முதல் ஆளாக அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும் எனச் சொன்னவர் யார்? ஓ.பி.எஸ் தான். ஆனால், அவரே விசாரணை கமிஷன் அமைப்பதற்கு போகவில்லை. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன சொன்னார் அவரைப் பொருத்தவரை எப்பொழுதும் நிறுத்தி நிதானமாகப் பேசக்கூடியவர். ஓ.பி.எஸ் தன் மீதுள்ள ஊழல் புகாருக்குப் பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே ஓ.பி.எஸ். தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் பொழுது சேகர் ரெட்டிக்கு பதவி கொடுத்தது பன்னீர்செல்வம் தான் என்று பேசியவர் அமைச்சர் சி.வி.சண்முகம். இப்படிப்பட்ட ஆட்கள் இன்று ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்றால் மக்களுக்காகவா?
நிச்சயமாக இது கிடையாது. இன்னும் ஆட்சி முடிய ஆறு மாதம் இருக்கிறது. அது வரைக்கும் ஒன்றாக இருந்து கொள்ளை அடிப்போம் என்பதற்காகத்தான் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இப்பொழுது நடப்பது ஆட்சியல்ல வீழ்ச்சி. இந்த வேதனை ஆட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எனக்கு முன்னால் பேசிய எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், இந்த கரோனா காலத்திலும் அ.தி.மு.க அரசு எப்படி எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் பட்டியலிட்டு விளக்கமாகச் சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட இந்தக் கொள்ளை கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கான ஜனநாயகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அதற்கு நீங்கள் அத்தனை பேரும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.