அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர், ‘உழைக்கத் தெரிந்த உத்தமர் ஸ்டாலின் மட்டும்தான்’ எனப் பாராட்டுவது போலவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் திட்டுவது போலவும், அமைச்சர் வாய்ஸிலேயே வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள்தான், இந்த எடிட்டிங் வேலையைச் செய்தார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், சந்தேகப் பார்வை எதிர்க்கட்சியினர் மேல் விழுவதைத் தவிர்க்க முடியாது.
ஆபாசப் புகைப்படங்களில் நடிகைகளின் தலையை ‘மார்ஃபிங்’ செய்து, அந்த நடிகைகளைக் கெட்டவர்கள் போல் சித்தரிப்பது வாடிக்கையாக நடந்துவருகிறது. அதுபோன்ற ஒரு செயல்தான், அரசியல் தலைவர்களின் சொந்தக் குரலையே, கன்னாபின்னாவென்று எடிட் செய்து, அவர்களை ‘டேமேஜ்’ செய்வதும்.
மீம்ஸ் காமெடியின் அடுத்த கட்டமாக, இதுபோன்ற வீடியோக்கள் வரத்துவங்கியிருப்பது ஆபத்தானது. ‘அந்த அமைச்சர் அப்படிப் பேசக்கூடியவர்தான்.. பேசினாலும் பேசியிருப்பார்.. போதையில் அப்படிப் பேசியிருப்பாரோ?’ என்று, இத்தகைய ‘வாய்ஸ் எடிட்டிங் வீடியோக்கள்’ சாமானியர்களை நம்பவைத்துவிடும்.
‘நாங்களும் பதிலடி தருகிறோம்..’ என்று ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினருக்கு எதிராக, குயுக்தி மனப்பான்மையோடு கிளம்பினால் என்னவாகும்? மு.க.ஸ்டாலினை உதயநிதி விமர்சிப்பது போலவும், அவரே எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டுவது போலவும், உதயநிதியின் சொந்தக் குரலிலேயே ‘எடிட்டிங் வீடியோக்கள்’ வெளிவரும். அரசியலில் இதுபோன்ற அநாகரிக கலாச்சாரம் வேர்விடும்.
அதேபோல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை அனந்தலை, பகுதியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகையை ரூ.5,000 ஆக கொடுக்க வேண்டும் என்று அதற்கு கணக்கும் தெரிவித்திருந்தார். அவர் தெரிவித்திருந்தது, “தற்போதைய பொங்கல் பரிசு ரூ.2,500 + கரோனா நிதி ரூ.1,000. கூடுதலாக ரூ.5,000 -க்கு இன்னும் எவ்வளவு இருக்கிறது ரூ.1,500 எனக் கூறியிருப்பார்”. இதன்கடைசி பகுதியை மட்டும் எடிட் செய்து ஸ்டாலினின் கணக்கு ரூ.2,500 + ரூ.1,000 மொத்தம் ரூ.5,000 என சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.
‘சிரித்துவைப்போம்’ என்று சமூகம் இதனை அனுமதித்தால், காலம் சென்ற அரசியல் தலைவர்களையும், வாய்ஸ் எடிட்டிங் பேர்வழிகள் விட்டுவைக்க மாட்டார்கள். இதுவும் ஒருவிதமான வன்முறையே!