பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவருக்கு அடிபட்டதில் பிறந்த நாள் கொண்டாடிய மாணவர் சுய நினைவை இழந்தது சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த சபீக் அகமது என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். கடந்த 10 ஆம் தேதி சபீக் அகமதின் பிறந்தநாளின் போது உடன் பயிலும் மாணவர்கள் இணைந்து அவரது பிறந்தநாளை கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நண்பர்கள் சபீக் அகமதினை தாக்கியும் அடித்தும் பிறந்தநாளினை கொண்டாடினர்.
அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சபீக் மீது மற்ற மாணவர்களும் விழுந்து விளையாடியதால் சபீக் அகமதுவின் மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று கழுத்தில் அறுபட்டது. இதனைத் தொடர்ந்து சபீக் தன்னிலை மறந்தார். இதனைக் கண்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
இதன்பின் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு சபீக் அகமது கொண்டு செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். சபீக் அகமது, கோமா நிலையில் இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், சபீக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் நான்கு மாணவர்களை மூன்று மாதங்களுக்கு இடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடத்த கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்களுடனான பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எதிர்பாரா நிகழ்வாக நிகழ்ந்த சம்பவத்தில் மாணவர் சுயநினைவை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.