Skip to main content

சேலத்தில் அதிசயம்... நடுத்தெருவில் உருவான திடீர் 'கழிவு நீரூற்று'! 3 மாசமாகியும் யாரும் கண்டுக்கல!!

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

சேலத்தில், நட்டநடுத்தெருவில் தோன்றிய திடீர் கழிவு நீரூற்றால், தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர்க்குழாய் உடைப்பு காரணமா? அல்லது பாதாள சாக்கடை கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழியின் வழியாக கழிவுநீரும், குடிநீரும் கலந்து ஓடுகிறதா? என தெரியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

 

 The miracle in Salem ... the sudden 'waste fountain'



சேலம் பாரதி நகர், உடையார் தெரு, மாரியம்மன் கோயில், இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தில், நட்டநடுத்தெருவில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென்று தார் சாலையை பிளந்து கொண்டு, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. மழைக்காலங்களில் வழக்கத்தைவிட தண்ணீர் வெள்ளமாக பாய்ந்து, அருகில் உள்ள சாக்கடைக் கால்வாயில் கலக்கிறது.


பிரச்னைக்குரிய இடத்தில், கடந்த ஆண்டு பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக குழி தோண்டி, அதன் மீது சிமெண்ட் மூடி போட்டு மூடப்பட்டு உள்ளது. வாகனப்போக்குவரத்து காரணமாக அந்த மூடி பெயர்ந்துள்ளது. இந்நிலையில்தான் திடீரென்று அந்தக்குழியின் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாகக் கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். இந்தப் பகுதி, சேலம் மாநகராட்சியின் 8 மற்றும் 7 ஆகிய இரு கோட்டங்களுக்கும் உட்பட்ட பகுதியாக அடங்கி இருக்கிறது.

 

 The miracle in Salem ... the sudden 'waste fountain'



இது தொடர்பாக பாரதி நகரைச் சேர்ந்த சுப்ரமணி, இனாயத்பேகம், சரஸ்வதி, சுதா, சாந்தி, குணா, முரளி ஆகியோர் கூறியது:


கடந்த மூன்று மாதமாக இப்படித்தான் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆரம்பத்தில், குடிநீர்க் குழாய் உடைப்பால்தான் இப்படி தண்ணீர் வெளியேறுவதாக நினைத்தோம். இன்னும் சிலர், சாக்கடைக் கால்வாயில் ஓடும் கழிவுநீர், அதிகப்படியான அழுத்தம் காரணமாக பாதாள சாக்கடைக் குழியைப் பிளந்து கொண்டு வெளியேறுவதாக சொல்கின்றனர். தண்ணீர் ஓடிக்கொண்டே இருப்பதால் இந்த சாலையும் சிதிலமடைந்து உள்ளது.


இரண்டு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலர் இந்த இடத்தில் வாகனங்களை திருப்ப முடியாமல் தடுமாறி விழுந்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோக்கள் இந்த இடத்தில் செல்ல முடியாமல் ரொம்பவே திணறி வருகின்றது. கடந்த சில நாள்களுக்கு முன், இந்த தெருவில் ஒரு வீட்டின் விசேஷத்திற்கு வந்த ஒருவர், இந்த தண்ணீரை நல்ல தண்ணீர் என நினைத்து முகம், கை, கால்களை எல்லாம் கழுவிவிட்டு, குடித்துவிட்டுப் போன அவலமும் நடந்தது.

 

 The miracle in Salem ... the sudden 'waste fountain'



ஏற்கனவே சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். அதன்பேரில் அதிகாரிகள் சிலர் இந்த இடத்திற்கு வந்து நேரில் பார்த்துவிட்டுச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் வெளியேறுவதை உடனடியாக சரி செய்ய வேண்டும். சாலையில் உள்ள குழிக்குள் இடரி விழுந்து உயிர்ச்சேதம் நடப்பதற்குள் சாலையையும் சரி செய்ய வேண்டும்.


இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


இது மட்டுமின்றி, அந்தத் தெருவில் சாக்கடைக் கால்வாய்கள் சிதிலமடைந்து, மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் ஓடும் அவலநிலையும் உள்ளது. டெங்கு ஒழிப்பில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் கடுமையாக களப்பணியாற்றி வரும் நிலையில், இதுபோன்ற பிரச்னைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்