கடந்த சில தினங்களாக பெய்துவந்த பெருமழை காரணமாக ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. ஓடைகளிலும், ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இந்த தண்ணீர் பல ஊர்களைச் சூழ்ந்துகொண்டுள்ளது. மக்களைப் பாதுகாக்கவும் அவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பரபரப்பாக செயல்பட்டுவருகிறார்கள். அந்த வகையில், ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துசென்று தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குத் தண்ணீர் நிறைந்து வடிவதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துவருகிறார். நேற்று (21.11.2021) சித்தமல்லி டேம் நிரம்பி 1,300 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அந்த உபரி நீர் சென்ற பகுதிகளில் ஏராளமான விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. வீதிகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. அப்பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்களை முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கும் பணியில் ஈடுபட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்து கொடுத்துவருகிறார்.
ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் உள்ள உடையார்பாளையம் நகரில் உள்ள ரெங்கசமுத்திரம் ஏரி நிரம்பி, அதன் உபரி தண்ணீர் திருச்சி சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஓடுகிறது. இதை நேரில் பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து உபரிநீர் சாலையைவிட்டு மாற்று வழியில் வடிவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்துள்ளார். இவரோடு ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன் ராஜா உடையார்பாளையம் திமுக பிரமுகர் துருவேந்திரன் உட்பட பல அதிகாரிகள் உடன் இருந்து செயல்பட்டுவருகின்றனர்.