உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா, தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அந்த வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் இதுவரை 17835 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2739 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு இன்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவில் இருந்து 118 பேர் குணம் அடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
ஒன்றரை லட்சம் நோயாளிகளை குணப்படுத்தக்கூடிய அளவுக்கு மருந்துகள் தமிழக அரசின் கைவசம் உள்ளன. நாட்டிலேயே அதிக ஆய்வகங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.